திண்டுக்கல், செப். 21: திண்டுக்கல் குடைபாறைபட்டியில் ஊர் மக்கள் சார்பாக விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. 3வது நாளான நேற்று ஊர்மக்கள் விநாயகர் சிலையை தேரில் வைத்து தாரை தப்பட்டைகள் முழங்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இழுத்து வந்தனர். மதுரை சாலை வந்தவுடன் தாரை தப்பட்டை அடிப்பதை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் பஜனை செய்தும் கோலாட்டம் ஆடியும் ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து அமைதியான முறையில் மதுரை ரோட்டில் விநாயகர் சிலை ஊர்வலம் கடந்து சென்றது. பின்னர் விநாயகர் சிலை கோட்டை குளத்தில் கரைக்கப்பட்டது. முன்னதாக கோட்டை குளத்தில் விநாயகர் கரைக்க கொண்டு வந்த போது கூட்டத்தில் பாம்பு புகுந்தது. இதனால் கரைக்க வந்த மக்கள் பாம்பை கண்டு அலறி ஓடினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்த பின்பு, விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. ஊர்வலத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க டிஐஜி அபினவ் குமார், எஸ்பி பாஸ்கரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.