திண்டுக்கல், செப். 2: திண்டுக்கல் கரூர் ரயில்வே சுரங்கப்பாதையில் சாதாரண தூறலுக்கு சகதியாகவும், மழைக்கு குளமாகவும் நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் – கரூர் ரோடு ரயில்வே சுரங்க பாலத்தில் மழை பெய்தால் மட்டும் இல்லை. வெயில் காலத்திலும் கழிவு நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சர்வீஸ் ரோடுகள் முறையாக அமைக்கப்படவில்லை. முகப்பு பாதை ரோடு வசதி இல்லை. சுரங்க பாதையில் இருந்து திருச்சி ரோடு பாலம் இணைக்கும் இடத்தில் ரோடு சீராக இல்லாமல் மேடு பள்ளங்களாக உள்ளது.
பாலம் நெடுஞ்சாலைத்துறை திட்டதுறை கட்டுபாட்டில் உள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கவில்லை. ஆதனால் இவர்களும் கண்டுகொள்வது இல்லை. அதனால் கரூர் ரயில்வே சுரங்க பாலத்தில் வாகனங்கள் செல்வதற்கே மிகவும் அவதிப்படுகின்றனர். பாலத்தில் தேங்கியுள்ள நீரை அகற்றி வாகன ஓட்டிகள் செல்ல, மாநகராட்சி நிர்வாகம் மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் திட்டத்துறை கூட்டு முயற்சி செய்து ஆலோசனை செய்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.