திண்டுக்கல், அக். 7: வேடசந்தூர் அருகே எரியோடு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மதுரை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி விஜயகார்த்திக் ராஜூக்கு புகார் வந்தது இதையடுத்து அவர், தீவிர வாகன சோதனைநடத்தி நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் டிஎஸ்பி ஜெகதீசன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில், எஸ்ஐ கார்த்திகேயன், எஸ்எஸ்ஐக்கள் முருகானந்தம், செல்வம் மற்றும் போலீசார் நேற்று எரியோடு அரசு மருத்துவமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 16 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசாரை கண்டதும் காரை ஓட்டி வந்த டிரைவர் உள்பட 2 பேர் வேனை விட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.
விசாரணையில் வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர்கள் வேடசந்தூர் அருகேயுள்ள பிலாத்து பகுதியை சேர்ந்த கார் உரிமையாளர் திருமலைசாமி, விஜய் கிருஷ்ணா என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் அரிசி ஆலைகளுக்கு கொடுப்பதற்காகவும், கால்நடை தீவனம் தயாரிப்பதற்காகவும் ரேஷன் அரிசியை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வேன், ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். தப்பிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.