திண்டுக்கல், செப். 20: திண்டுக்கல் அருகே குடிபோதையில் தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு அடுத்த பாப்பணம்பட்டியில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் ஊர் சார்பில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்து வழிபாட்டில் இருந்தவர்களை மோதுவது போல் வந்தது. அந்த ஊர் பொதுமக்கள் அந்த காரை வழி மறித்து ஏன் இப்படி வேகமாக ஓட்டி வர்றீங்க என்று கேட்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது அந்தக் காரில் இருந்தவர்கள் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் 3 பேரையும் ஊர்மக்கள் பிடித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தகராறில் ஈடுபட்டது திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியைச் சேர்ந்த அன்பு ரமேஷ் (27), புதுகாப்பிலியபட்டியைச்சேர்ந்த நாகராஜன்(30), தாடிக்கொம்பு திருமஞ்சன வீதியைச் சேர்ந்த சரவணன்(44) என்பது தெரிய வந்தது. மேலும் தாலுகா காவல் நிலையஇன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.