திண்டுக்கல், ஆக. 31: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் கல்வி கடன் வழங்கும் முகாம் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருணாச்சலம் வரவேற்றார். ஆர்டிஓ சக்திவேல், கனரா வங்கி உதவி பொது மேலாளர் பல்லாணி ரங்கநாத், பாரத ஸ்டேட் வங்கி உதவி பொது மேலாளர் திவ்ய தேஜா, பிஎஸ்என்ஏ கல்லூரி சீனியர் பைனான்ஸ் மேனேஜர் சகாபுதீன், கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் சிவசுப்பிரமணியம், மேற்கு தாசில்தார் வில்லியம் தேவதாஸ் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் 12 தேசிய வங்கிகள் மூலம் 163 மாணவர்களுக்கு ரூ.6 கோடியே 32 லட்சம் கல்வி கடன் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: கல்வி கடன் முகாம் என்பது பொருளாதாரம் இல்லாத மாணவர்கள் கல்வி வாய்ப்பை இழந்து விட கூடாது என்பதற்காக அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய மிகச்சிறந்த திட்டம். திண்டுக்கல் மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக உருவாகி வருகிறது. மாணவர்கள் கல்வி கடன் வாங்கி சிறந்தவர்களாக உருவாகி வேலைக்கு செல்ல வேண்டும். வங்கிகள் அதிக கடன் கொடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு பேசினார்.