திண்டுக்கல், ஜூன் 11: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் நெகிழி கழிவு மேலாண்மை அலகில் பணிபுரியும் 35 தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் சரவணன் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி கவுரவித்து பேசியதாவது: உலக சுற்றுச்சூழல் தினம் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மரக்கன்றுகள் நடுதல், விதை நடவு செய்தல், குறுங்காடுகள் அமைத்தல், பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சுழல் விழிப்புணர்வு கட்டுரை. பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிலுள்ள அலுவலகங்களில் தூய்மை நடை பயணம் மேற்கொண்டு குப்பை சேகரித்தல், பிரித்தல், உள்ளூர் விற்பனையாளர்கள் மூலம் கழிவுநீக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இதன் ஒரு கட்டமாக நெகிழி கழிவு மேலாண்மை அலகில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான பணியில் ஈடுபட்டு சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் நெகிழி கழிவு மேலாண்மை அலகில் பணிபுரியும் தொழிலாளர்களை பாராட்டி கவுரவித்து ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 35 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வீடுகள், கடைகள், வியாபார நிறுவனங்கள், பொது இடங்களில் உருவாகும் குப்பைகளை தூய்மை காவலர்கள் சேகரிக்கின்றனர். கிராம ஊராட்சிகளை தூய்மை படுத்தும் பணிகளில் 2,588 தூய்மை காவலர்கள் பணியமர்த்தப்பட்டு தூய்மை பணி செய்து வருகின்றனர். மக்கும் குப்பை, மக்காத குப்பை தனித்தனியாக பிரித்து சேகரிக்கப்படுகிறது.
மக்கும் குப்பைகளை சமுதாய உரக்குழி, மண்புழு உரக்கூடம், நுண்ணுயிர் கூடங்கள் மூலம் உரமாக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யதக்க பிளாஸ்டிக் பொருட்களை உள்ளுர் விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ ஜெயபாரதி, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் கங்காதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.