திண்டுக்கல், பிப். 19: திண்டுக்கல்லில் திமுக வழக்கறிஞர்கள் மீண்டும் நீதிமன்ற பணிக்கு திரும்பினர். திண்டுக்கல் வழக்கறிஞர் உதயகுமார் தாக்கப்பட்டது தொடர்பாக, வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்து வருகிறது. நடந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்பிறகும் வழக்கறிஞர்களின் போராட்டம் தொடர்ந்தது.
இந்த போராட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாக கூறி திமுக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இருந்து விலகி, நேற்று வழக்கம் போல பணிக்கு திரும்பினர். திமுக கிழக்கு மாவட்ட அவை தலைவர் வழக்கறிஞர் காமாட்சி கூறுகையில், ‘இந்த போராட்டம் வேறொரு பின்னணியாக மாற்றப்பட்டு விட்டது.
இச்சம்பவத்தை பேட்டி கொடுக்கும் அளவிற்கு பெரிதாக்கி மக்கள் மத்தியில் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அது உண்மையல்ல. சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது. அதன் பின்னும் யாரோ தூண்டுதலின் பேரில் இந்த போராட்டத்தை நடத்தி சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தி வருவதில் திமுக வழக்கறிஞர் அணிக்கு உடன்பாடு இல்லை. இதனால், நாங்கள் மீண்டும் நீதிமன்ற பணிக்கு சென்றுள்ளோம்’ என்றார்.