திண்டுக்கல், ஆக. 30: தமிழ் வளர்ச்சி துறையில் திருக்குறள் முற்றோதல் (ஒப்புவித்தல்) பாராட்டு பரிசு எனும் திட்டத்தின் கீழ் உலக பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ, மாணவியர் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்க செய்யும் வகையில் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.15,000 வீதம் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-2022ம் ஆண்டில் விண்ணப்பம் செய்த மாணவ, மாணவியர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு கலெக்டர் அலுவலகத்தில் திறனறி குழுவின் முன்னிலையில் திருக்குறள் முற்றோதல் நேராய்வு நடைபெற்றது.
திறனறி குழு நேராய்வின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுக்கு தேர்வு செய்து பரிந்துரை செய்யப்பட்டனர். இதில் நத்தம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்ற ரமா, நத்தம் ராம்சன்ஸ் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு பயின்ற மோகனப்பிரியா, ஐந்தாம் வகுப்பு பயின்ற பிரேமா, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நான்காம் வகுப்பு பயின்ற மாணவி அன்புமதி ஆகியோருக்கு ரூ.15,000 வீதம் பரிசுகள் மற்றும் தமிழக முதலமைச்சரால் கையொப்பமிடப்பட்ட பாராட்டு சான்றிதழ்கள், அரசாணைகளை கலெக்டர் பூங்கொடி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.