திண்டுக்கல், செப்.4: திண்டுக்கல்லில் தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி தலைமை வகித்தார். திண்டுக்கல் ஒன்றிய துணைத் தலைவர் சோபியா ராணி, குருசாமி, ராதாகிருஷ்ணன், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் சுப்புலட்சுமி, செந்தில்குமார், அலெக்ஸ், புருஷோத்தமன், ஜெயராமன், இளைஞரணி அமைப்பாளர் ரூபன், முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை வரவேற்று பேசினார். இதில் அமைச்சர் பேசுகையில், கடந்த மூன்று வருடங்களில் ரேஷன் கார்டு கேட்டு புதிதாக விண்ணப்பித்த 16 லட்சம் பேருக்கு கார்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது 3 லட்சம் பேர் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் ஒரு லட்சம் பேருக்கு தற்போது புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆய்வுப் பணிகள் முடிவடைந்த உடன் அவர்களுக்கும் மீதம் உள்ளவர்களுக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும். அதேபோல் தமிழகத்தில் 2,115 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் உத்தரவின் பேரில் ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கிலோ 28 ரூபாய் வீதம் உயர் தரமான அரிசி மாதந்தோறும் 75,000 மெட்ரிக் டன் வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார். இதில் முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலம், மேற்கு மாவட்ட கழகப் பொருளாளர் விஜயன், ஒன்றிய பெருந்தலைவர் ராஜா, நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்சா, மாவட்ட மீனவர் அணி கணேசன், கவியரசன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் தேவி இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கீதா வெள்ளிமலை, சித்ரா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.