திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடந்த ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி பகுதிகளில் இருந்து 18 அணிகள் பங்கேற்றன. போட்டி துவக்க விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி முன்னிலை வகித்தார். போட்டியை மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம், மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி துவக்கி வைத்தனர். போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. இதன் இறுதி போட்டியும், பெண்களுக்கான கால்பந்து போட்டி இன்று நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கால்பந்து கழக துணைச் செயலாளர் ஈசாக், கால்பந்து பயிற்சியாளர்கள் தினேஷ், கலையரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.