திண்டுக்கல், செப். 14: திண்டுக்கல்லில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் மழை பெய்யும்போது அதிக அளவில் தண்ணீர் தேங்குதல், கழிவுநீர் கால்வாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக மழைநீர் வெளியேறாமல் போவது, கால்வாய்களில் குப்பைகள் மற்றும் மட்காத பொருட்கள் தேங்கிக்கிடப்பது உள்ளிட்ட பிரச்னைகள் அதிகம் உள்ளன. இவற்றை சீரமைக்கும் பணிகள் மாநகராட்சி தரப்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, தற்போது வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் பொது நிதியிலிருந்து மிக விரைவாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2 மற்றும் 9வது வார்டுகளில் கழிவு நீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது மாமன்ற உறுப்பினர்கள் கணேசன், சாந்தி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.