திண்டுக்கல், ஆக. 17: திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ மாணவர்கள் சங்கம், இந்திய மருத்துவர்கள் சங்கம், அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு டாக்டர் சங்க மாநில செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாகராஜன், பொருளாளர் திருலோகசந்திரன், இந்திய மருத்துவ சங்க கிளை தலைவர் ராஜ்குமார், செயலாளர் லலித் குமார் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கொல்கத்தாவில் பெண் டாக்டரை பலாத்காரம் செய்து படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி கோஷமிட்டனர்.
மேலும் மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளில் இன்று காலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரை உயிர் காக்கும் முக்கிய சிகிச்சைகளை தவிர புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாது. இதுதவிர மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அரசு டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவார்கள். மேலும் இன்று காலை 7.30 மணியளவில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் இணைந்து மவுன ஊர்வலம் நடத்த உள்ளனர் என தெரிவித்தனர்.