செஞ்சி, ஜூன் 26: திண்டிவனம் பழங்குடி இருளர் வகுப்பினை சேர்ந்த மாணவிக்கு கல்லூரியில் படிப்பதற்கான ஆணை மற்றும் கல்வி உதவித்தொகையை ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த பழங்குடி இருளர் வகுப்பைச் சேர்ந்த அய்யாசாமி மனைவி வித்யா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும், தற்போது 24 வயது நிறைவுற்றதால் கல்லூரியில் சேர முடியவில்லை எனவும், தனக்கு தமிழ் மீது அதிக ஆர்வம் இருப்பதாலும் இளங்கலை மற்றும் முதுகலை படித்து முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக பணிபுரிய விரும்புகிறேன் என்றும், எனக்கு நடப்பு கல்வி ஆண்டில் இளங்கலை பிஏ தமிழ் பட்டப்படிப்பு படித்திடும் வகையில் கல்லூரியில் சேர்க்க உதவி புரிந்திட வேண்டும் என கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் வழங்கினார்.
அதன் அடிப்படையில் நேற்று வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் திண்டிவனம் பகுதியில் வசித்து வரும் பழங்குடி இருளர் வகுப்பைச் சேர்ந்த வித்யாவுக்கு சிறப்பு சேர்க்கையின் அடிப்படையில் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி அறிவியல் கல்லூரியில் இளங்கலை பிஏ தமிழ் படிப்பு படிப்பதற்கான ஆணை வழங்கப்பட்டதுடன் கல்வி உதவித்தொகை மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியிலிருந்து ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செஞ்சி வருவாய் வட்டாட்சியர் துரைச்செல்வன், திண்டிவனம் கோவிந்தசாமி கலைக்கல்லூரி முதல்வர் தங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமதாஸ், இளங்கோவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.