திண்டிவனம், ஜூன் 3: திண்டிவனம் அருகே மினி வேன் மீது அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வெண்மணியாத்தூரில் இருந்து கொள்ளார் கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் நேற்று மினி வேனில் கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு திண்டிவனம் வந்து கொண்டிருந்தனர். அப்போது தர்மபுரியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டிவனம் சிப்காட் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது வெண்மணியாத்தூரில் இருந்து வந்த மினி வேன் மீது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து மற்றும் மினி வேன் கடுமையான சேதம் அடைந்தது.
மேலும் இந்த விபத்தில் மினி வேன் மீது மோதிய அரசு பேருந்து அருகே இருந்த சிறிய பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த சத்யராஜ் மகன் சந்திரன்(42), மூதா என்பவரின் மகன் யுகதேவ்(20), மனோகரன் மகன் பார்த்திபன்(33), கோவிந்தசாமி மனைவி அமுதா (55) ஆகிய நான்கு பேரும், அரசு பேருந்தில் பயணம் செய்த 6 பேரும் என மொத்தம் 10 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த ரோசனை போலீசார் காயமடைந்தவர்களை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பரபரப்பாக காணப்பட்டது. போக்குவரத்து பாதிப்பை போலீசார் சரி செய்தனர்.