திண்டிவனம், ஆக. 10: திண்டிவனம் அருகே பெண் மின்வாரிய அலுவலர் வீட்டில் மின்சாரம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மானூர் கோபாலபுரம் 5வது தெருவை சேர்ந்தவர் வீரம்மாள். இவர் திண்டிவனம் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கு மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் மின்சாரம் திருடப்படுவதாக வந்த புகாரின் பேரில், நேற்று முன் தினம் மின்வாரிய அலுவலக பறக்கும் படையினர் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் உள்ள ஏசிக்கு மின்சாரம் திருடப்படுவது தெரிய வந்தது. இதனையடுத்து பறக்கும் படையினர், திண்டிவனத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அலுவலர்கள் இதற்கு முன்னதாக இதே போல் அவரது வீட்டில் மின்சாரம் திருடப்பட்டதாக அபராதம் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தனர். இது குறித்து மின்வாரிய அலுவலர் வீரம்மாள் என்பவரிடம் விசாரணை செய்ததில், மின் இணைப்பு தனது பெயரில் உள்ளதாகவும், ஆனால் தனக்கு தெரியாமல் கணவர் சுப்பையா மின்சார திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சுப்பையா மீது மின்வாரிய அலுவலர்கள் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மின்வாரிய அலுவலர் வீட்டிலேயே மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.