வானூர், மே 24: வானூர் தாலுகா கிளியனூர் அருகே தண்ணீர் டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநர் பலியானார். நடத்துனர் உள்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து சுமார் 38 பயணிகளுடன் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. திண்டிவனம் அருகே ஓமந்தூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் டேங்கர் லாரி மூலம் நெடுஞ்சாலையில்உள்ள பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது டேங்கர் லாரி மீது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தை ஓட்டிவந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்து நடத்துனர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேகர் (50) மற்றும் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த கிளியனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் போலீசார் ஜேசிபி உதவியுடன் பேருந்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
எனினும் பேருந்தின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியதால், இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த ஓட்டுநர் மாரிமுத்துவின் உடலை மீட்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர். பின்னர் நவீன இயந்திரங்கள் மூலம் பேருந்தின் பாகங்களை வெட்டி எடுத்து, நீணட நேரம் போராடி சிரமப்பட்டு ஒருவழியாக ஓட்டுநரின் உடலை மீட்டனர். தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்து காரணமாக புதுச்சேரி-சென்னை நெடுஞ்சாலையில் நேற்று மதியம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடரும் விபத்துகள்: திண்டிவனம் நெடுஞ்சாலையில் இதுபோல் ஏற்கனவே ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. தைலாபுரம் பகுதியில் நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதியதில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தவர் பலியானார். இதுபோல் நெடுஞ்சாலையில் தண்ணீர் ஊற்றும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது.