திண்டிவனம், செப். 4: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேட்டில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து கனரக வாகனங்களில் கொண்டு வரப்படும் ரேஷன் அரிசி மூட்டைகள், இந்த சேமிப்பு கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டு பின்னர் ரேஷன் கடைகள் மற்றும் சத்துணவு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இதேபோல் ஒப்பந்ததாரர் தனகோட்டி என்பவருக்கு சொந்தமான லாரியில், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயிலில் வந்த 50 கிலோ எடை கொண்ட 600 ரேஷன் அரிசி மூட்டைகளை ஓட்டுநர் சையது சுல்பிக்கர் அலி (44) என்பவர் ஏற்றிக்கொண்டு சந்தைமேட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோன் எதிரே நேற்று முன்தினம் இரவு நிறுத்தி உள்ளார். மீண்டும் நேற்று காலை 11 மணியளவில் சென்று பார்த்தபோது, ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லாரியை காணவில்லை.
இது குறித்து ஓட்டுநர், லாரி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து லாரியில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி மூலம் லாரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ரோசணை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். லாரியில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி, தீவனூர் அருகே உள்ள மேல் பேரடிக்குப்பம் பகுதியில் இருப்பதை காட்டியுள்ளது. அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது தீவனூர் அருகே சாலையோரம் லாரி நின்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரியில் பார்த்தபோது சுமார் 512 மூட்டை ரேஷன் அரிசி திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும் லாரியில் இருந்த ஜிபிஎஸ் கருவியை ஆய்வு செய்ததில் செஞ்சி சாலை மேல் பேரடிக்குப்பம் கிராமத்தில் உள்ள அம்மன் நகரில் நிறுத்தி, வேறு ஒரு லாரியில் அரிசி மூட்டைகளை மாற்றிக்கொண்டு செஞ்சி மார்க்கமாக செல்லும்போது தீவனூர் அருகே லாரியை விட்டு சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக ரோசணை போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.