தர்மபுரி, ஏப்.21: நல்லம்பள்ளி ஒன்றியம், மானியதஅள்ளி கிராமத்தில் அரசு திட்டப் பணிகளை கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசின் அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையின் விவசாயிகள் பெற, வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணி குறித்து, நல்லம்பள்ளி அருகே மானியதஅள்ளி கிராமத்தில், கலெக்டர் சாந்தி களஆய்வு மேற்கொண்டார். இதில் கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் பணியை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். மேலும், கிரையென்ஸ் என்ற வலைத்தளத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்வதற்காக, ஆதார் அட்டை நகல், கணினி சிட்டா, வங்கி புத்தக நகல், விவசாயின் புகைப்படம், கைப்பேசி எண் விவசாயிகள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்க கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, மானியதஅள்ளி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் கள ஆய்வு மேற்கொண்டு, 2 விவாசாயிகளுக்கு மானிய விலையில் விசைதெளிப்பான், தார்பாய்களை வழங்கினார். முன்னதாக, பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மாலினி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோவன், வேளாண் அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண் அலுவலர் ஜனார்த்தனன் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.