தா.பழூர், ஆக. 29: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாதர் மற்றும் நந்தி பெருமானுக்கு மாப்பொடி, பால், தயிர், நெய், இளநீர், கரும்பு சாறு, பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர் அலங்கரிக்கப்பட்டு மங்கள இசை முழங்க கோயிலில் பிரதட்சணம் நடைபெற்றது. இதில் மாலையில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ நாயகரை பிரதோஷ வழிபாட்டு குழுவினர் தூக்கி கோயில் உள் பிரகாரத்தில் மேளதாளத்துடன் வலம் வந்தனர். இதில் தா.பழூர் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்பாள் உடனுறை பசுபதீஸ்வரர் கோயில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மாள் உடனுறை சுந்தரேஸ்வரர் கோயில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோயில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோயில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் நந்தி பெருமானுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மங்கள இசை முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து நான்கு கால பூஜையிலும் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.