தா.பழூர், ஜூன் 25: அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்று வட்டார பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு தொழிற்பயிற்சி நிலையம் தமிழக அரசின் உத்தரவின் படி நிறைவேறியது. தற்போது இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. தா.பழூரில் நீண்ட காலமாக எந்தவித உயர்கல்வி நிறுவனங்களும் இல்லாத நிலையில் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தனது தேர்தல் வாக்குறுதியில் இந்த பகுதி மக்களுக்கு தொழில் பயிற்சி நிலையம் அமைத்து தருவேன் என கூறியிருந்தார்.
அதன்படி துறை ரீதியான அமைச்சர்களிடம் முறையிட்டு தற்போது தமிழக முதல்வரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு முதற்கட்டமாக அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அரசு தொழில் பயிற்சி நிலையத்திற்கான சேர்க்கையை துவக்கி வைத்தார்.
இதில் மேனுஃபாக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் ஆட்டோமேஷன், சிவில் இன்ஜினியரிங் உதவியாளர், குளிர் பதனம் மற்றும் தட்பவெப்ப நிலை கட்டுப்படுத்துபவர், கம்பியாள் உள்ளிட்ட தொழில் பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. நடப்பாண்டில் 108 சேர்க்கைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க கூடும்.இந்நிகழ்ச்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர் ஜான் பாட்ஷா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், குணசேகரன், தலைமை ஆசிரியர் காந்திமதி, ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் தனவேல், அண்ணாதுரை மற்றும் பயிற்சி அலுவலர்கள், தா.பழூர் கிழக்கு, மத்தியம், மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.