தா.பழூர், மே. 31: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள நவ சக்தி சங்கு விநாயகர் ஆலயத்தில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நவசக்தி சங்கு விநாயகர் ஆலயத்தில் உள்ள துர்க்கை அம்மன் வார வழிபாட்டு குழுவினர் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை பூஜித்து சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அதுபோல் நேற்று வெள்ளிக்கிழமை 10;30 – 12 ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் பால், தயிர், நெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, அருகம்புல் பொடி, கரும்பு சாறு, பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மகா தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பெண்கள் தங்கள் குடும்பம் நலம் பெற வேண்டியும் விவசாயம், தொழில் உள்ளிட்டவை சிறப்புடன் நடைபெற வேண்டியும் பூஜை செய்து துர்கை அம்மனை வழிபட்டனர்.