சத்தியமங்கலம், செப்.2: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் தாளவாடி போலீசார் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த மொபட்டை தடுத்து நிறுத்தி அதில் வந்திருந்த நபரின் பையை சோதனையிட்டனர். அப்போது அதில் பாறைகளை வெடிக்க வைக்க பயன்படுத்தும் 38 ஜெலட்டின் குச்சிகள், வெடி மருந்துடன் கூடிய 11 அலுமினியம் குப்பிகள் இருந்தது.
இது குறித்து மொபட்டில் வந்த நபரிடம் விசாரித்தபோது அவர் தாளவாடி அருகே உள்ள ஓசூர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி (47) என்பதும், இவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடி மருந்துகளை வாங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். வெடி மருந்துகள் வைப்பதற்கான உரிமம் ஏதும் அவரிடம் இல்லாததால் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடி மருந்துகளை பறிமுதல் செய்த தாளவாடி போலீசார் இது குறித்து ரங்கசாமியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.