ஈரோடு, ஜூலை 7: ஈரோடு மாநகராட்சி, 19வது வார்டில் உள்ளது நல்லிதோட்டம் பழையபாளையம் இணைப்புச்சாலை போஸ்டல் நகர், முதல் வீதி. தொடங்கும் இடத்தின் அருகில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சாலையில் குழி தோண்டப்பட்டு பழுது நீக்கப்பட்ட து. தொடர்ந்து, குடிநீர் இணைப்புக்காக நல்லிதோட்டம் பழையபாளையம் இணைப்புச்சாலை குறுக்காக தார் சாலை தோண்டப்பட்டு குடி நீர் இணைப்பு வங்கப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் தற்போது வரை அந்த சாலையில் தோண்டப்பட்ட இடத்தில் மீண்டும் தார்சலை அமைத்து சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் முதல், சாலையில் நடந்து செல்பவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், பள்ளி வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள், லாரி என கனரக வாகனங்கள் முதற்கொண்டு இந்த சாலையில் சென்று வருவதால் பள்ளம் மேலும் அதிகமாகி கார்களின் டயர் பாதியளவுக்கு மூழ்கும் அளவுக்கு குழியாகி உள்ளது. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது, அதன் ஆழம் தெரியாமல் வாகனங்கள் அந்த குழியில் ஏறி, இறங்கும் போது, வாகனங்கள் அடிப்பட்டு பழுதாகி வருகின்றன. மேலும், இருசக்கர வாகனங்களில் வரும் முதியவர்கள் உள்ளிட்ட பலரும் கீழே விழும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே, அந்த பள்ளத்தை சரி செய்து, சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.