மீனம்பாக்கம், ஜூன் 20: தாய்லாந்து நட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, நேற்று அதிகாலை தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நிறுத்தி, சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 40 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலாப் பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்திருந்தார். சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகத்தில், அவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவருடைய உடைமைகளுக்குள் இரண்டு பெரிய கூடைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவைகளை எடுத்து திறந்து பார்த்தபோது, ஒரு கூடையில் அரிய வகை ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்குகள் 2 இருந்தன. மற்றொரு கூடையில் ஆப்பிரிக்க நாட்டு அரிய வகை ஆமைகள் 7 இருந்தன.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்து, விசாரித்தனர். அப்போது அந்தப் பயணி விசாரணைக்கு சரிவர பதில் அளிக்காமல் மழுப்பலாக பதில் கூறினார். இதையடுத்து அந்த கருங்குரங்குகளையும், அறிய வகை ஆமைகளையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர். அதோடு இந்த அரிய வகை உயிரினங்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல், மருத்துவ சான்றிதழ்கள் போன்றவைகளும் இல்லாமல், கொண்டுவரப்பட்டிருந்தன. இதனால் இந்த விலங்குகளை நமது நாட்டிற்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய் கிருமிகள் நமது நாட்டில் உள்ள விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் பரவும் ஆபத்துள்ளது என்று தெரிய வந்தது.
எனவே இந்த உயிரினங்களை மீண்டும் எந்த விமானத்தில் சென்னைக்கு வந்ததோ, அதே விமானத்தில், தாய்லாந்து நாட்டிற்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றனர். அதற்கான செலவுகளை இந்த விலங்குகளை சட்டவிரோதமாக கடத்தி வந்த பயணியிடம் வசூலிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த விலங்குகளை சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வந்த, சென்னையைச் சேர்ந்த அந்தப் பயணியை கைது செய்து, அவர் மீது சுங்கச் சட்டம் மற்றும் அரிய வகை உயிரினங்களை சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வரும் தடை சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர்.