Friday, September 20, 2024
Home » தாய்ப்பாலும் அதன் மகத்துவமும்

தாய்ப்பாலும் அதன் மகத்துவமும்

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி
உணவே மருந்து புதிய தொடர்

மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு. உண்ணும் உணவும், உணவுப் பழக்க வழக்கங்களுமே ஒருவரின் உடல்நலத்தைத் தீர்மானிக்கின்றன. தமிழர் மருத்துவத்தில் உணவே அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவினியாக கருதப்பட்டு வந்தது. “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்ற வள்ளுவர் வாக்கின்படி, அவரவர் உடல் தன்மைக்கு பொருந்திய உணவு எது? பொருந்தா உணவு எது? என ஆராய்ந்து, தெளிந்து உணவு முறையை வகுத்துக் கொண்டால், உடலுக்கு தீமையளிக்கும் நோய்கள் நம்மை அணுகாது. ஒரு நோய்க்கு மருந்தாகும் சரியான உணவு எது? நம் அனைவருக்குமே எப்போதும்  ஏற்படக்கூடிய சந்தேகம் இது. மனிதனின் முதல் உணவான தாய்ப்பாலையே எடுத்துக் கொள்வோம். அதிலேயே இன்றைய இளம் தாய்களுக்கு பாலூட்டுவதில் தொடங்கி, அந்தப்பால் குழந்தையினிடத்தில் உண்டாக்கும் தாக்கங்கள் வரை எண்ணிலடங்கா சந்தேகங்கள் எழுகின்றன. உணவைப்பற்றிய நம் சந்தேகங்களில் தெளிவுபெற, மனிதனின் முதல் உணவான தாய்ப்பாலிலிருந்தே தொடங்குவோம்… உணவியல் நிபுணர் டாக்டர் மீனாட்சி பஜாஜ் அவர்கள் சந்தேகங்களையெல்லாம்  தீர்க்கிறார்…தாயின் உணவு தாய்ப்பாலை பாதிக்குமா?பெரும்பாலான பாலூட்டும் தாய்மார்கள், இது போன்ற தவறான தகவல்களை மருத்துவர் அல்லாதவர்களிடமிருந்து கேள்விப்படுகின்றனர். இவர்கள் சொல்லும் உணவுக்கட்டுப்பாடுகளுக்கு அறிவியல் ரீதியிலான காரணங்கள் எதுவும் இல்லை. தாய்ப்பாலின் ஊட்டச்சத்து தரமானது, தாய் எடுத்துக்கொள்ளும் உணவின் தரம் மற்றும் தாயின் ஊட்டச்சத்துநிலையைச் சார்ந்துள்ளது. கர்ப்பகாலத்திலிருந்தே தாய், தன் உடலில் சேர்த்து வைக்கும் ஊட்டச்சத்துக்கள், தாய்ப்பால் உற்பத்தியை மேம்படுத்துவதில் வேலை செய்கின்றன. கர்ப்பமாக இருக்கும் போதும் சரி, குழந்தை பிறந்த பிறகும் சரி, தாயின் மோசமான ஊட்டச்சத்து நிலை மற்றும் அவள் எடுத்துக் கொள்ளும் உணவில் போதிய ஊட்டச்சத்து இல்லாவிட்டாலும் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கலாம். கருவுற்ற நாள் தொடங்கியே ஒரு பெண்ணின் மார்பு, பாலூட்டுவதற்கு தக்கவாறு, தாய்ப்பால் உற்பத்திக்கான கூடுதல் ஆற்றலையும், ஊட்டச்சத்துக்களையும் சேமித்து வைப்பதற்கு தகுந்தவாறு தன்னை தயார்படுத்திக் கொள்கிறது. பிரசவத்திற்கு முன்னும், பின்னும் தாயானவள் தன்னுடைய பசி, தாகம் மற்றும் சில உணவு விருப்பங்கள் அதிகரிப்பதை உணர முடியும். புரோட்டீன், கொழுப்பு, கார்போ  ஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் போன்ற அனைத்தும் நிரம்பிய ஒரு முழுமையான உணவு தாய்ப்பால் என்பதை ஏராளமான ஆய்வுகள் நிரூபிக்கின்றன. பாலூட்டும் ஒரு தாய் போதிய ஊட்டச்சத்து உணவுகள் எடுத்துக் கொள்ளவில்லை என்றால், தாய்ப்பாலில் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்காது. குறிப்பாக, வைட்டமின் B6, B12  மற்றும்  D போன்றவை குறைய நேரிடலாம். இருப்பினும், தாயிடம்  உள்ள கொழுப்பு, கொழுப்பு உட்கொள்ளல் போன்றவை தாய் வழியாக, தாய்ப்பாலின் கொழுப்பு உள்ளடக்கங்களில் வெளிப்படையான தாக்கங்கள் கொண்டிருப்பதில்லை. எனவே, பாலூட்டும் தாய்க்கு எந்தவிதமான உணவுக்கட்டுப்பாடும் தேவையில்லை.  கற்பனையான உணவுக்கட்டுப்பாடுகள் அந்தத் தாயின் வாழ்க்கைத்தரத்தையும், அவள் கொடுக்கும் தாய்ப்பாலின் தரத்தையும் குறைத்துவிடும். மேலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் அவள் தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதில் ஊக்கக்குறைவை ஏற்படுத்தும்.பாலூட்டும் தாய்  என்னவெல்லாம் சாப்பிடலாம்?தாய்ப்பால் கொடுக்கும் தாயின் ஊட்டச்சத்து தேவையானது. கலோரிகள் அளவிலும், புரதங்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் அடிப்படையில் அதிகரிக்கிறது.  இந்த அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், குழந்தையின் ஊட்டச்சத்து தேவை மாற்றமடைவதைத் தொடர்ந்து, உடலில் பால் உற்பத்திக்கு இயற்கையாக பயன்படுத்தப்படுகின்றன. குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான Docosa Hexanoic Acid தாய்ப்பாலில் இயற்கையாக உள்ளது. முழுதானியங்கள் (சுண்டல்), கீரை வகைகள், வெந்தயம் மற்றும் தோல் நீக்கிய மீனை உணவில் சேர்த்துக் கொள்வதால், இந்த Docosa Hexanoic Acid அளவை அதிகரிக்க முடியும்.  உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்பு அமிலம் மிகுந்துள்ள பேக்கரி உணவுகள், பீட்சா, பர்கர் போன்ற துரித  உணவுகளை எடுத்துக் கொண்டால் தாய்ப்பாலில் இருக்கும் DHC  லெவல் குறைந்துவிடும். தாய்மார்கள் மாட்டுப்பால், முட்டை மற்றும் பிற ஆன்ட்டிஜென் உணவுகளை தவிர்ப்பதன் மூலம் குழந்தைக்கு எக்ஸிமா போன்ற தோல்நோய் வராமல் காக்க முடியும். அதிகப்படியாக ‘D’  வைட்டமின் மற்றும் அயோடின் போன்ற ஊட்டச்சத்து மாத்திரைகளை பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொண்டால் அது தாய்ப்பாலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்திவிடும். காபி, டீ மற்றும் மென்பானங்களில் கஃபைன் இருப்பதால் இவற்றை குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.எந்தெந்த உணவுகள் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும்?மசாலாப் பொருட்களான பூண்டு, வெந்தயம், சோம்பு போன்றவை தாய்ப்பாலின் அளவை அதிகரிப்பதற்கும், சீரான அளவில் சுரப்பதற்கும் உதவுகின்றன. இவற்றைத் தவிர, நீராகாரங்களில் பால், தயிர், மோர், முழு தானியங்கள், பொட்டுக்கடலை, கீரை, பச்சை காய்கறிகள்,  சுறாப்புட்டு, புரதம் நிறைந்த முட்டை வெள்ளைக்கரு, பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள், எள், ஃப்ளாக்ஸ் போன்ற விதை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். உணவில் பூண்டை அதிகம் சேர்த்துக்கொள்வதால் தாய்ப்பால் அதிகரிப்பதையும், தாய்ப்பாலின் சுவையையும் பூண்டு அதிகரிப்பதால் குழந்தைகள் விரும்பி குடிப்பதையும்  ஆய்வுகள் நிரூபிக்கின்றன.  குழந்தைக்கு பாலூட்டுவதற்கு முன்பு பால், மோர் என ஏதாவதொரு பானத்தை  குடிப்பதால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.தாய் உண்ணும் எந்தெந்த உணவுகள் குழந்தைக்கு சளி, வாயுத் தொல்லையை ஏற்படுத்துகிறது?மிக அரிதாக, தாய்மார்கள் சாப்பிடும் உணவுகள், குழந்தைகளுக்கு  எதிர்வினையாக்குவதுடன், சில உணவுகள் குழந்தைகளுக்கு இடையில் வேறுபடுகின்றன, எனவே, எல்லா பாலூட்டும் தாய்மார்களையும் குறிப்பிட்ட உணவை தவிர்க்க பரிந்துரைக்க முடியாது. இருந்தாலும், பொதுவாகவே வாயுவை உண்டாக்கக்கூடிய சில உணவுகளான முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கிழங்கு வகைகளை தவிர்க்கலாம். பொதுவாகவே குழந்தைகளுக்கு செரிமான உறுப்புகள் வளர்ச்சியடையாததால்  ஸ்டார்ச் மிகுந்த உணவுப்பொருட்கள் செரிமானமாவதற்கு தாமதமாகும். இதனால் குழந்தைகளுக்கு வாயு உண்டாகும். 6 மாதங்களுக்குப் பிறகு முளைவிட்ட ராகியை கூழாக கொடுக்கலாம். ராகியில் உள்ள அமிலேஸ் செரிமானத்தை அதிகரிக்கும். குழந்தையின் வாயுத்தொல்லை குறையும் வரை, தாய் உணவில் அதைத் தூண்டக்கூடிய உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. தாய்ப்பாலின் வெப்பநிலை உடல் வெப்பநிலையை ஒத்து இருக்கும். மேலும் தெர்மோகுலேசன் மூலம் வெப்பநிலை நன்கு பராமரிக்கப்படுவதால், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு சளி பிடிக்காது.  தாய் உண்ணும் எந்தவொரு குளிர் உணவும் தாய்ப்பாலை பாதிப்பதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு ஏன் குறைகிறது? அப்படி குறைந்தால் திரும்பவும் எப்படி அதிகரிப்பது? தாய்ப்பால் சுரப்பானது, பால் கொடுக்கும் போது குழந்தையை வைத்துக் கொள்ளும் நிலை. தாயின் மார்பகத்தை ஒரு குழந்தை எப்படி இணைக்கிறது, தாயின் உணவு, தாயின் உளவியல் காரணிகள் மற்றும் சில ஹார்மோன்கள் போன்ற சில காரணிகளால் பாதிக்கப்படுகிறது. தாயின் ஹார்மோன்கள், குழந்தையுடனான அவளின் உடலியல் பிணைப்பு, அதிக வெளிச்சமோ, சத்தமோ இல்லாத தாய்ப்பால் கொடுப்பதற்கேற்ற வசதியான சூழல் போன்றவை தாயானவள் தன் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் தருவதற்கு சாதகமாக இருப்பவை. தரமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை தாய் எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக தாய்ப்பால் நன்றாக சுரக்கும். ஒருவேளை தாய்ப்பால் சுரப்பு அறவே நின்றுபோகும்பட்சத்தில் அதற்கான மருத்துவ சிகிச்சைகள் உள்ளன.தாய் தன் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துக்களின் அளவு  அட்டவணைஊட்டச்சத்து         0-6 மாதங்கள்    0-2 மாதங்கள்ஆற்றல் (kcal)                      600                    74புரோட்டீன்                           520                    68கால்சியம்                           1200                  1200அஸ்கார்பிக் ஆசிட் (mg/d)                                        80                      80துத்தநாகம் (mg/d)                                        12                       12வைட்டமின் ‘A’ (mcg/d) ரெட்டினால்          950                       950வைட்டமின் ‘A’(mcg/d) பீட்டா கரோட்டீன்           760                        7600‘B’ வைட்டமின்  (mcg/d)                                    2    ஃபோலேட் (ug)                  300    வைட்டமின் B12 (mg/d)                                      1.2    இரும்பு (mg/2)                      21    இந்த அட்டவணையில் குறிப்பிட்டிருக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பாலூட்டும் தாய்க்கு கிடைக்கும் வகையில் சமையல் கலைஞர் நித்யா நடராஜன்  எனர்ஜி பார் ரெசிபி ஒன்றை நமக்கு விளக்குகிறார்.நியூட்ரிஷியஸ் பார் தேவையான பொருட்கள்பாதாம்   :  50 கிராம்பிஸ்தா  :     25 கிராம்வால்நட் :     25 கிராம்முந்திரி  :     25 கிராம்உலர்ந்த திராட்சை :    25 கிராம்சூரியகாந்தி விதை :    25 கிராம்வெள்ளை எள்ளு :     50 கிராம்கருப்பு எள்ளு : 50 கிராம்வெல்லம் :  500 கிராம்தண்ணீர் -: 1 டம்ளர்.எப்படிச் செய்வது?வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்தவுடன் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். கடாயில் மேலே சொன்ன அனைத்துப் பொருட்களையும் உலர் திராட்சை தவிர, ஒன்றாக சேர்த்து 5 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது, வடித்து வைத்துள்ள வெல்லத்தை பாகு பதத்திற்கு காய்ச்சிட வேண்டும். தண் ணீரில் வெல்லப்பாகை சிறிது விட்டால் பாகு உருண்டு வரும் பதத்திற்கு காய்ச்ச வேண்டும். இத்துடன், வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்க்கவும். 5 நிமிடம் நன்கு கிளறி, அனைத்தும் நன்றாக திரண்டு வந்ததும், எண்ணெய் தடவி வைத்துள்ள சப்பாத்திக் கல்லில் கலவையைக் கொட்டி அதன்மேல் பட்டர் பேப்பர் வைத்து பூரி கட்டையால் சமமாக தேய்த்து விடவும். பிறகு பட்டர் பேப்பரை எடுத்துவிட்டு துண்டுகளாக வெட்டவும். இதை அப்படியே ஒரு இரவு முழுவதும் வைத்துவிட்டு அடுத்த நாள் எடுத்து காற்று புகாத டப்பாவில் போட்டு பயன்படுத்தவும். இந்த எனர்ஜிபாரில் உள்ள சத்துக்கள் இரும்பு, தாதுப் பொருள்கள், உயிர்ச்சத்து மற்றும் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல எலும்பு, தசை வளர்ச்சியையும் தரும். பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற உணவு. நோய் எதிர்ப்பு சக்தியையும், நல்ல (HDL) கொழுப்பையும் தரும். பிரசவகால விடுப்பு முடிந்து வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டிலிருப்பது போல், உணவில் கவனம் செலுத்த முடியாது. இவர்கள் இதை ஒரு டப்பாவில் போட்டு, அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லலாம். தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரை இந்த எனர்ஜி பாரை எடுத்துக் கொள்வதால் நல்ல ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.– மகாலட்சுமி

You may also like

Leave a Comment

12 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi