ஊட்டி: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனங்களில் தாயை பிரிந்து மீட்கப்படும் யானை குட்டிகள், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து தொந்தரவு செய்யும் காட்டு யானைகள் போன்றவை பிடிக்கப்பட்டு இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, இங்கு 20க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளை பழங்குடியினத்தை சேர்ந்த பாகன்கள் கண்ணும், கருத்துமாக பராமரித்து வருகின்றனர். இதில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தை சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி, யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர். கடந்த 2017ல் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் தாயிடம் இருந்து பிரிந்து காயத்துடன் சுற்றி திரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் குட்டி யானை மீட்கப்பட்டு முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு வரப்பட்டு ரகு என பெயரிடப்பட்டது. சத்தியமங்கலம் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு தாயை பிரிந்த மற்றொரு யானை அம்முவும் பராமரிக்கப்படுகிறது. தாயை பிரிந்து தவித்த இரண்டு யானை குட்டிகளை பராமரிக்கும் பணியை பழங்குடியினத்தை சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியிடம் ஒப்படைத்தனர்.இந்த பழங்குடியின தம்பதி, இரு குட்டிகளுக்கு தாய், தந்தையாக மாறி வளர்த்து ஆளாக்கினர். இந்த பழங்குடியின தம்பதியின் கதையை ஊட்டியை சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ், கடந்த இரு வருடங்களாக ஆவண படமாக்கி இருக்கிறார்.‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ (Elephant Whisperers) என்ற பெயரில் எடுக்கப்பட்ட இந்த ஆவண குறும்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த ஆவண குறும்படம் 95வது ஆஸ்கர் விருதுக்கான ஆவண குறும்பட பிரிவிற்கு தேர்வானது. இதையடுத்து தற்போது விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இறுதி பட்டியலில் தேர்வாகும் பட்சத்தில் ஆஸ்கர் விருது கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. …