தாம்பரம், ஆக. 18: தாம்பரம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் இந்த மாத தொடக்கத்திலிருந்து வரும் 18ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும் மற்றும் இரவு 10 முதல் 11.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வேயின் இந்த அறிவிப்பால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என பலரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகள், கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகள், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் 70 பேருந்துகளை கூடுதலாக மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக கடந்த 18 நாட்களிலும் தாம்பரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, வண்டலூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் காலை முதலே பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மேலும் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையிலிருந்து பல்லாவரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வந்தனர். அதே போல் காலை 9.30 மணி வரை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்களில் ஏறுவதற்கு ஆயிரக்கணக்கான பயணிகள் மக்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பலருக்கும் இருக்கை கிடைக்காமல் ரயிலில் உள்ளே நின்றபடியே பயணம் மேற்கொண்டனர்.
இதே போல் பல்லாவரம் ரயில் நிலையத்திலும் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. மேலும் பல்லாவரத்தில் ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்குச் செல்வதற்கு எஸ்கலேட்டர்கள் இல்லாததால் தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்று மற்றொரு நடைபாதைக்குச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தெற்கு ரயில்வேயின் சரியான திட்டமிடாத காரணத்தால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், ரயில் நிலையங்களில் கூடும் கூட்டம் மும்பை ரயில் நிலையஙளில் கூடும் கூட்டத்தை போல் காணப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் பலரும் தெற்கு ரயில்வேயின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். மேலும், அனைத்து புறநகர் ரயில் நிலையஙளிலும் போதுமான வசதிகளை ஏற்படுத்தி தர கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒருமணி நேரம் தாமதமாக இயக்கம்
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் 1 மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருந்தது.அதன்படி, காலை நேரங்களில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, இயக்கப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்படுவதாகவும், சுமார் அரை மணி நேரம் முதல் 1 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் செல்வதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். இப்பிரச்னை கடந்த 2 நாட்களாக நீடித்து வருவதால் காலை நேரங்களில் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி – கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ – மாணவிகள் என அனைவரும் உரிய நேரத்திற்குச் செல்ல முடியவில்லை.
இதுகுறித்து ரயில்வே துறை ஊழியர்களிடம் கேட்டால், தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதாலும், காலை நேரங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களால் சிக்னல் கிடைப்பதற்கு தாமதம் ஏற்படுவதாகவும் அலட்சியமாக தெரிவிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் தண்டவாளம் சீரமைப்பு பணி இன்று முடிவடையவுள்ள நிலையில், இன்று மதியத்திற்குமேல் புறநகர் மின்சார ரயில் சேவை வழக்கம்போல செயல்படும் எனவும், அதன்பின் பயணிகள் சிரமமின்றி ரயில்களில் பயணிக்கலாம் எனவும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.