தாம்பரம், நவ.16: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை உள்ளிட்ட களப்பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரினை அகற்றுவதற்கான மோட்டார் பம்புகள் மற்றும் பேரிடர் மீட்பு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அரசு செயலாளருமான சமயமூர்த்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில், தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்துக்கு உட்பட்ட 60வது வார்டு டிடிகே நகர் பகுதியில் கால்வாயில் மோட்டார் பம்பு மூலம் மழைநீர் வெளியேற்றும் பணி மற்றும் 4வது மண்டல அலுவலக வளாகத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சியின் பேரிடர் மீட்பு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர் பகுதியில் அடையாறு ஆற்றின் கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதையும் ஆய்வு செய்தார்.
பின்னர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் வெள்ளப்பெருக்கை தடுப்பதற்காகவும் அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன எடுத்திருக்கிறார்கள் என்பதை கண்காணிப்பு அலுவலர் என்ற முறையில் ஆய்வு செய்துள்ளேன். மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதனை சரிசெய்யவும், காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு என அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே மாவட்ட அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கின்றனர். இதன்மூலம் தேவையான முன்னேற்பாடுகள் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்டுள்ளது. ஏரிகளில் தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். இந்த முறை வடகிழக்கு பருவமழை சிறிது தாமதமாக வந்ததால் 40 சதவீத ஏரிகள் நிரம்பியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து ஏரிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெரிய குளங்களாக இருந்தால் நீர்வளத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கண்காணிப்பு குழு, கிராமப்புறங்களில் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குளம், குட்டைகளுக்கு பஞ்சாயத்தின் கிளார்க் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஏரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் யாராவது ஏரியின் கறைகளை உடைத்தாலோ அல்லது உடைக்க முயற்சித்தாலோ அவர்கள் மீது காவல்துறையின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். ஆய்வின்போது, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்குமார் சிங் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்