தாம்பரம், ஆக.22: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ஏராளமான கடைகள், ஓட்டல்கள், தொழில் நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளன. இதில் சுமார் 22 கடைகள் தொழில் உரிமம் பெறாமல் இருந்தன. தொழில் உரிமம் பெற வேண்டும் என மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் தொழில் உரிமம் பெறாமல் சம்பந்தப்பட்ட கடைகள் தொடர்ந்து பல மாதங்களாக இயங்கி வந்தது. தொடர்ந்து, தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் தொழில் உரிமம் பெறாததால் நேற்று சம்பந்தப்பட்ட கடைகளுக்கு தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் பணிகளை தொடங்கினர்.
இதில், முதலில் ஜிஎஸ்டி சாலை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள ஷாஸ் என்ற பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் கடந்த 8 ஆண்டுகளாக தொழில் உரிமம் பெறாமலும், கட்டிட உரிமையாளரிடம் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமலும் இருந்ததால், அந்த கடைக்கு போலீசார் பாதுகாப்புடன் தாம்பரம் மாநகராட்சி நகர்நல அலுவலர் அருள்ஆனந்தம் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களை வெளியேற்றி, கடைக்கு சீல் வைத்தனர். அதேபோல, பெருங்களத்தூர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடம், ஓட்டல், 2 கடைகள் என தாம்பரம் மாநகராட்சியில் நேற்று மொத்தம் 5 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.