தாம்பரம், ஆக.20: தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையர் அழகுமீனா தலைமையில் தனியார் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, கழிவுநீர் மேலாண்மை விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கழிவுநீர் லாரி இயக்குபவர்கள், கழிவுநீர்த் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதிக்க கூடாது மற்றும் திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடு, கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்றம் செய்யக்கூடாது. மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013, பிரிவு 7ன்படி, எந்தவொரு நபரும், ஒப்பந்ததாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது.
அவ்வாறு ஈடுபடுத்தினால், அந்த நபரின் மீது மேற்படி சட்டத்தின் பிரிவு 9ன்படி முதன் முறையாக மீறுபவர்களுக்கு ஆண்டுகள் 2 சிறைத்தண்டனை விதிக்கப்படும். இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் தாம்பரம் மாநகராட்சியில் கழிவுநீர் அகற்றும் உரிமம் பெற்ற லாரி உரிமையாளர்கள் மட்டுமே கழிவுநீர்த் தொட்டியிலிருந்து கழிவுநீரை அகற்ற அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கழிவுநீர் வாகன உரிமையாளர்கள், கழிவுநீரினை அகற்றிட பெருங்களத்தூர் மண்டலம் மண்ணூரான்குளம் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொது கால்வாய்களிலோ, நீர் நிலைகளிலோ, ஆற்றுப் படுகைகளிலோ கொட்டப்படுவது கண்டறியப்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர் மீது சட்ட விதிகளுக்குட்பட்டு நடவடிக்கைகள் மாநகராட்சி மற்றும் காவல்துறை மூலம் மேற்கொள்ளப்படும்.
கழிவுநீர் லாரியில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும். பணியாளர்களை கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது, அதையும் மீறி கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி இறக்க நேரிட்டால், இழப்பீட்டுத் தொகை ₹15 லட்சத்தினை வீட்டு உரிமையாளர் மற்றும் லாரி உரிமையாளர் ஆகிய இருவராலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் நகர் நல அலுவலர்அருள்ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கோ.ஆனந்தஜோதி, துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.