ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே பூட்டியிருந்த அதிமுக பிரமுகரின் வீட்டை உடைத்து, 25 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தாம்பரம் அருகே வரதராஜபுரம், ராயப்பா நகரில் வசிப்பவர் மோகன் (57). இவர், அப்பகுதியில் அதிமுக கிளை செயலாளராக உள்ளார். மேலும், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இதற்கிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்துடன் கன்னியாகுமரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோகன் சென்றிருக்கிறார். பின்னர், நேற்று அனைவரும் வீடு திரும்பினர்.
இந்நிலையில், தனது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து அதிமுக பிரமுகர் மோகன் அதிர்ச்சியானார். பின்னர், குடும்பத்துடன் உள்ளே சென்று பார்த்துள்ளார். வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் மகளின் திருமணத்துக்காக லாக்கரில் வைத்திருந்த 25 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது மோகனுக்குத் தெரியவந்தது. இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அதிமுக பிரமுகரின் வீட்டில் மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.