கரூர், செப். 1: தாந்தோணி ஒன்றிய பகுதியில் வேளாண்பயிர்களில் மயில்கள் அட்டகாசம் செய்வதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் தேசிய பறவை மயில் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டதைத் தடுக்க சட்டப் பாதுகாப்பை மேற்கொண்டது. அதையடுத்து, கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் காடுகளில் மட்டுமின்றி, கிராமங்கள், நகரங்களில் குடியிருப்புகளிலும் சாதாரணாக உலவி வருகின்றன. மயில்கள் பெரும்பாலும் வேளாண்பயிர்களையும், காய்கறிகளையும், பாம்பு ஆகியவற்றை சாப்பிடுவதால் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.
தாந்தோணி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெரூர், வெள்ளியணை, ஜெகதாபி, பிச்சம்பட்டி, கோயம்பள்ளி, செல்லிபாளையம், ஜல்லிப்பட்டி பச்சப்பட்டி, கடவூர் அருகே உள்ள காணியாளப்பட்டி கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள பஞ்சப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்துள்ள கத்தரி, வெண்டை, மிளகாய், கடலை வெங்காயம், சூரியகாந்தி, சுரைக்காய், பூசணிக்காய் பீர்க்கங்காய், புடலங்காய் மக்காச்சோளம், வெள்ளரி, வெள்ளை பூசணி, ஆகிய பயிர்களில் நாசப்படுத்தி வருகின்றன. மேலும், கரூர் மாவட்டத்தில் குறிப்பாக விவசாய பயிர்கள் செய்யக்கூடிய பகுதிகளில் சுற்றித் தெரியும் மயில்களை பிடித்து மலைப் பகுதிகளில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.