கரூர், நவ. 20: தாந்தோணிமலை மில்கேட் நிறுத்தத்தில் அனைத்து பேரூந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் தாந்தோணிமலை மில்கேட் பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் கரூர், மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர். ஆனால், இந்த மில்கேட் நிறுத்தத்தில், ஷேர் ஆட்டோ, நகரப் பேரூந்துகள் மட்டுமே நின்று செல்கிறது. திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து கரூர் நோக்கி வரும் பேரூந்துகள் நிறுத்தப்படுவதில்லை.
இதனால், அவசர தேவைக்கு கரூர் மாநகரத்துக்கு எளிதாக செல்ல முடியாமல் நகரப் பேரூந்துகளுக்காக பெரும்பாலான பயணிகள் காத்துக் கிடக்கின்றனர். எனவே, தாந்தோணிமலை பஸ் நிறுத்தத்தில் அனைத்து பேரூந்துகளும் நின்று செல்வதுபோல, மில்கேட் பஸ் நிறுத்தம் அருகிலும் பேருந்துகள் அனைத்தும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.