கரூர், ஆக. 31: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடிகால் வசதி அமைக்காத பகுதிகளில் விரைந்து சாக்கடை வடிகால் அமைக்கத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கருர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் மற்றும் இனாம்கரூர் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், தாந்தோணிமலை, சணப்பிரட்டி ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், தாந்தோணிமலை, சணப்பிரட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான தெருக்களில் இதுநாள் வரை வடிகால் வசதியின்றி, கழிவு நீர் சாலையில் தேங்கி, பொதுமக்களுக்கு பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இதுபோன்ற பகுதிகளை பார்வையிட்டு, சாக்கடை வடிகால்கள் அமைக்க வேண்டும் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை வடிகால் வசதி இல்லாத இடங்களில் அதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை எழுந்துள்ளது.