கரூர், அக். 20: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை குறிஞ்சி நகரை ஒட்டி வடக்குத்தெருவில் கடந்த 2014-15ம் ஆண்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரு.10 லட்சம் மதிப்பில் நவீன சமூதாய கழிப்பிடம் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கழிப்பிடம் அமைந்துள்ள பகுதியில் பெரும்பாலான குடியிருப்புகளில் கழிப்பிட வசதி இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியினர் தினமும் இநத கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த கழிப்பிடம் குறிப்பிட்ட நேரம் மட்டுமே செயல்படுகிறது. காலை ஆரம்பித்து மதியம் வரை திறக்கப்பட்டு பின்னர் மூடப்படுகிறது.
ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் எப்போதும் மூடிக்கிடக்கிறது. இதனால், இதனை தினமும் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனை பராமரிக்க தேவையான நபர்கள் பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், அனைவரின் நலனையும் கருதி இந்த சுகாதார வளாகத்தை எப்போதும் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.