கொள்ளிடம், மே 19: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமம் அண்ணா நகரில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. அப்போது தெருவில் இருந்த மின்கம்பங்களில் இருந்து மின்கம்பிகள் திடீரென அருந்து வீட்டு கூரைமேல் விழுந்தது.
அப்போது மின் கம்பியில் இருந்து தீப்பொறி வந்து கொண்டிருந்தது. இது குறித்து கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்தி மின்கம்பிகளை சரி செய்து மின்சாரம் வழங்கினர். பலத்த காற்றால் மின்கம்பிகள் அறுந்து விழுந்த சம்பவத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.