பரமக்குடி,அக்.27: பரமக்குடி அருகே அரசு திட்டங்களை ஊராட்சி மன்ற தலைவர் புறக்கணிப்பதாக கூறி பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கமுதக்குடி கிராம ஊராட்சியில் இந்திரா நகர் காலனி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கமுதக்குடி ஊராட்சி மன்ற தலைவர், ஆதிதிராவிடர்கள் வசிக்கக் கூடிய இந்திரா நகர் காலனிக்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் புறக்கணிப்பதாக கூறி நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரமக்குடி தாசில்தார் ரவி சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் போராட்டத்தை கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து, நேற்று, பரமக்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த இந்திரா நகர் காலனி பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ரவி தலைமையில், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் தேவபிரியதர்ஷினி மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மற்றும் இந்திரா நகர் பொது மக்களுக்கான சமாதான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்திரா நகர் பகுதியில் குடிநீர் பைப் லைன், புதிய தண்ணீர் டேங்க் அமைத்து தரப்படும். சாலை வசதி, அங்கன்வாடி கட்டிடம் பராமரித்து செய்யப்படும் என ஊராட்சி மன்றம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும், உத்தரவாதம் அளித்தது போல் உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும். இல்லையெனில், இந்திரா நகர் குடியிருக்கும் குடும்பங்கள் தங்களுடைய ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைத்து பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.