சேலம்: சேலத்தில் 2 இடங்களில் நடக்கும் மேம்பால பணியை விரைவுப்படுத்த கோரி தவழ்ந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர்கள் மனு கொடுத்தனர். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் கார்மேகத்திடம் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். மதியம் 1 மணியளவில் சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பார்த்திபன் உள்ளிட்ட 4 வாலிபர்கள், சாலையில் தவழ்ந்தபடி கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா தலைமையிலான போலீசார் வந்து தடுத்தனர். அப்போது மனு அளிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.