தேனி, ஆக.19: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக சமூக வளைதளங்களில் வெளியான தகவல் தவறானது என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான மனுக்களை அளிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆகஸ்டு 17ம் தேதி மற்றும், ஆகஸ்டு 19ம் தேதி மற்றும் ஆகஸ்டு 20ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுவதாக வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறையின் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.