திருச்சி, ஜூன் 7: தவறான சிகிச்சையளித்து கண் பார்வை இழக்க செய்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக தனியார் மருத்துவமனை ரூ.30 லட்சம் வழங்க திருச்சி மாவட்ட நுகர்வோர் கோர்ட் அதிரடி தீர்ப்பளித்தது. கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் வட்டம் சிந்தலவாடி ஆண்டியப்ப நகரைச் சேர்ந்தவர் ரெங்கநாதன்(43). விவசாயியான இவர் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் அதன் காரணமாக எழுந்த கடன் பிரச்சினைகளால் கடந்த 1.4.2017 அன்று பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றார். ஆனால் உறவினர்கள் அவரை மீட்டு, முசிறி வட்டம் துறையூர் சாலையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் 15 நாள்களாக சிகிச்சை பெற்றவர் ரூ.9 லட்சம் கட்டணமாக செலுத்தினார்.
இந்நிலையில் சிகிச்சையின் போது தொண்டையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழாய் பொருத்தப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, ரெங்கநாதனுக்கு இரு கண்களிலும் கண்பார்வை பறிபோனது. இதை தொடர்ந்து உடல் நிலை மோசமானது. எனவே திருச்சியிலுள்ள மற்றொர தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் முறையான சிகிச்சையளிக்காததால் கண் பார்வை இழக்க நேரிட்டது தெரிய வந்தது. இதற்கு சிகிச்சையளித்த மருத்துவமனையே காரணம் என்பதால், ரெங்கநாதன் முசிறி மருத்துவமனை மீது, கடந்த 15.11.2022ல் திருச்சி நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ரெங்கநாதன் தரப்பில் வக்கீல் கண்ணன் ஆஜரானார்.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தலைவர் சேகர், உறுப்பினர் செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிந்த நிலையில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், ரெங்கநாதனுக்கு முசிறி மருத்துவமனை சேவை குறைபாடு மற்றும் கவனக்குறைவு சிகிச்சை ஆகியவற்றுக்காக கண் பார்வையை இழந்த ரெங்கநாதனுக்கு இழப்பீடாக ரூ.30 லட்சமும், மருத்துவ சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட ரூ.9 லட்சத்து 91 ஆயிரத்து 391, வழக்கு செலவுத்தொகை ரூ.10 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ.39 லட்சத்து 91 ஆயிரத்து 401 தொகையை 45 நாட்களுக்குள், 9% சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.