Monday, May 29, 2023
Home » தல விருட்சங்களின் மகிமை வன்னிமரம்

தல விருட்சங்களின் மகிமை வன்னிமரம்

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் பஞ்ச வில்வங்களில் ஒன்றாக விளங்குவது வன்னி யாகும். இந்த வன்னி, வில்வமரத்திற்கு அடுத்த நிலையில் அதிக ஆலயங்களில் தலமரமாகப் போற்றப்படுகிறது. இம்மரம் ஒரு முள் உள்ள மரமாகும். இதன் இலைகள் சின்னஞ்சிறிய அளவில் கூட்டிலைகளைக் கொண்டு அழகுற அமைந்துள்ளன. இதன் காய்கள், உருளை வடிவம் கொண்டவை. இந்த மரம் பொதுவாகக் கரிசல் பூமியில் அதிகம் விளையும் தன்மை கொண்டது. இது எங்கு முளைத்தாலும் இதன் புனிதம் கருதி இதை எவரும் வெட்டத் துணிவதில்லை. இதன் தாவரப் பெயர் Prosopis Spicigera ஆகும்.இந்த மரம், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், மற்றும் வளைகுடா நாடுகளில் பரவிக் காணப்படுகிறது. ராஜஸ்தான் மாநில, மரமாகப் போற்றப்படும் இந்த மரம், சோழமன்னர்களின் குலமரமாகவும் விளங்கியது.இலக்கியங்கள்‘‘வம்பார் கொன்றை வன்னிமத்தம் மலர்தூவிநம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில்கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே’’– என்கிறது திருஞானசம்பந்தர் தேவாரம்.தலமரங்கள் சோழநாட்டுத் தலங்களில் திருமறைக்காடு (வேதாரண்யம்) அகத்தியான்பள்ளி, அரதைப்பெரும்பாழி, கடுவாய்க்கரைப்புத்தூர், மேலைத்திருக்காட்டுப்பள்ளி, திருக்கொள்ளிக்காடு, திருக்கோட்டூர், திருப்பட்டீச்சரம், திருப்பாச்சிலாச்சிரமம், திருப்பாம்புரம், திருப்பூந்துருத்தி, பெருவேளூர், பேணுபெருந்துறை, திருவன்னியூர், தொண்டை நாட்டில் திருவான்மியூர், நடுநாட்டில் திருவாமாத்தூர், திருமுண்டீச்சரம் (கிராமம்), விருதாச்சலம் (திருமுதுகுன்றம்) ஆகிய சிவாலயங்களில் வன்னி, தலமரமாக விளங்குகின்றது.இது தவிர, திருமறைக்காடு, திருமருகல், திருச்செம்பொன்பள்ளி ஆகிய தலங்களின் இரு தலமரங்களில் ஒன்றாகவும், திருமணஞ்சேரியில் மூன்று தலமரங்களில் ஒன்றாகவும் வன்னிமரம் திகழ்கின்றது. திருப்புகழ்த் தலங்களான வயலூர் (திருச்சி), வழுவூர் (மயிலாடுதுறை), வடுகூர் மற்றும் பழையசாரம் (புதுச்சேரி) முருகன் ஆலயங்களில் வன்னி தலமரமாக திகழ்கின்றது.மருத்துவக் குணம்காய்ச்சல், ஜலதோஷம், உடல்சூட்டைக்கூட்டுதல், நாடி நரம்புகளுக்கு வலுசேர்த்தல், வாதம் பித்தம் சமன் செய்தல் ஆகியவை இதன் மருத்துவக் குணங்களாகும். வன்னிமரத்தின் இலை, பூ, காய், பட்டை மற்றும் வேல் ஆகியவை மருந்தாகப் பயன்படுகின்றது.ஆலயவிழாவில் வன்னிமரம்திருவான்மியூரில் அமைந்துள்ள வன்னிமரம், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த மரத்திற்கு ஆண்டுதோறும் பிரம்மோற் சவத்தின் ஒன்பதாம் நாள் மாலை 4 மணியளவில், இறைவன் மருந்தீஸ்வரர், திரிபுரசுந்தரி இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்து, வன்னி மரத்திற்கு வந்து காட்சி தருவது பல்லாண்டு காலமாக நடந்து வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.இந்த மரத்தில் அகத்தியர், வான்மீகி முனிவர்களுக்கு இறைவன் காட்சி தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. இந்த மரத்தில் இன்றும் இறைவன் வாழ்வதாக நம்பப்படுவதால், இந்த மரத்தினைச் சுற்றி வருவது சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகின்றது. இதே போல், திருக்கருவாயக் கரைப்புத்தூரில் அமைச்சருக்கு வன்னி மரத்தில் காட்சி தந்தார் என தலபுராணம் கூறுகிறது.வன்னி குத்தும் விழாநவராத்திரி முடிந்து வரும் விஜய தசமி நாளில், சந்திரசேகரசுவாமி குதிரை வாகனத்தில் பவனி வந்து ஊரின் வெளியே உள்ள வன்னிமரத்தின் அடியில் எழுந்தருளி, அம்பு போடுவார். இதனை அம்புத் திருவிழா என்றும், வன்னி குத்தும் விழா என்றும் கூறுவர். வன்னி மரம் உறுதியானது என்பதால், அதில் அம்புகளைச் செலுத்திக் கோர்த்து வைப்பார்கள். இதுவே அம்பு போடும் விழாவானதாகக் கூறுவர். இந்த விழா அனைத்து சிவாலயங்களிலும் அம்பிகை ஆலயங்களிலும் நடைபெறும் விழாவாகும். திருப்பாச்சிலாச்சிரமம் தலத்தில் வன்னிமரம் அடிப்பாகம் பிரம்ம வடிவமாகவும், நடுப்பகுதி விண்ணு வடிவமாகவும், கிளைகள் கொண்ட மேல் பகுதி ருத்திர மூர்த்தி வடிவமாகப் போற்றப்பட்டு, மரமே திரிமூர்த்தியாக வணங்கப்படுகிறது. இதன் இலைகளைக் கொண்டு இறைவனைப் பூஜித்தால், வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.திருமறைக்காடு தலத்தில் அமைந்துள்ள வன்னிமரத்தினை வலம் வந்தால் திருமணப் பேறு, குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. துருவாசர், வன்னி மரத்தடியில் தவமிருந்து இறைவன் – இறைவி திருமணக்கோலத்தைக் கண்டார் எனத் தலபுராணம் கூறுகிறது. திருவான்மியூர் தலத்தில், வன்னிமரத்து சிவலிங்க வடிவம் கல்தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. திருக்கோட்டூரில், வன்னி மரத்தடியில் இறைவன் வடிவம் அமைந்துள்ளது. திருவாழ்கொளிப்புத்தூரில், அர்ஜுனனுக்கும், புள்ளிருக்கு வேளூரில் செவ்வாய்க்கும் (அங்காரகன்) வன்னிமரத்தில் இறைவன் காட்சிதந்துள்ளார்.திருப்பாண்டிக்கொடுமுடி, திருவாமாத்தூர், திருக்கோட்டூர்களில் முறையே பிரம்மன், பிருங்கி முனிவர், அமுதத்துளி ஆகியோர் மரமாகி நின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் உள்ள வன்னிமரத்தில், ஒருபுறம் நீளமான காய்கள் மற்றும் முட்கள் இருக்க, மறுபுறம் உருண்டை வடிவக் காய்கள் மற்றும் முட்களற்ற இலையும் இருப்பது அதிசயமான ஒன்றாகும். இதேபோல, கொடுமுடியில் பூக்களும், காய்களும் இன்றி, ஒருபுறம் முட்கள் நிறைந்தும், மறுபுறம் முட்களற்றும் வன்னிமரம் அமைந்துள்ளது.திருப்புறம்பயம், திருமருகல் இவற்றில் வன்னிமரமே சாட்சியாக இருந்துள்ளதைப் புராணம் குறிப்பிடுகிறது. மேலும், இங்கு காவடி எடுப்போர், வன்னி இலைகளை அதில் சேர்த்து எடுக்கும் வழக்கமும் உள்ளது. திருமுதுகுன்றத்தில் திருப்பணிக்கான கூலியாக வன்னி இலையை மடித்துத்தர, அதைப் பெற்ற தொழிலாளர்கள், அதனை பிரித்துப் பார்த்தபோது, தங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் இருந்ததைத் தல வரலாறு கூறுகிறது. இரண்டாம் பிராகாரத்தில் வன்னிமரம் செழித்து வளர்ந்துள்ளது. இதன் பெயரால் இந்த பிராகாரம் `வன்னியடி பிராகாரம்’ என அழைக்கப்படுகிறது. காரைக்குடிக்கு அருகேயுள்ள கோயிலூருக்கு, `சமீவனம்’ என்று பெயர். இதன் தலமரம் வன்னியாகும். `சமீ’ என்பது வன்னியின் வடமொழிப் பெயராகும். இந்த தலபுராணத்தை `சமீவன புராணம்’ என அழைப்பார்கள். திருவள்ளியூரில் தலமரமான வன்னியின் சிறப்பால் வன்னியூர் என அழைக்கப்படுகிறது.வன்னிமரம் ஞானத்தோடு தொடர்புடைய மரமாகும். இதன் காரணமாகவே பல்வேறு தலங்களில் ஞானமுர்த்தியான விநாயகப் பெருமான் வன்னி மரத்தடியில் வீற்றிருக்கின்றார். குடந்தைக் கீழ்க்கோட்டம் எனப்படும் கும்பகோணம் நாகநாதர் கோயிலில் வன்னிமரத்தின் கீழ் வடக்கு நோக்கி அமர்ந்துள்ள விநாயகர் `வன்னியடி விநாயகர்’ என அழைக்கப்படுகிறார். இவருக்கு இந்த தலபுராணத்தில் தனியிடம் தரப்பட்டுள்ளது.திருவண்ணாமலை கிளிக்கோபுரத்தில் வடக்கே உள்ள நந்தவனத்தில், வன்னிமரம் உள்ளது. அங்கே வன்னியடி விநாயகர் உள்ளார். வன்னி, அக்னி வடிவமானது என்பதால், அக்னித் தலத்தில் இது தலமரமாக அமைந்ததாகக் கூறுவர்.திருமணச் சாட்சியாக வந்த வன்னிமரம்சோழநாட்டின் கிழக்குக் கடற்கரை நகரத்தில் வணிக வியாபாரம் செய்யும் ஒருவர் வாழ்ந்து வந்தார். மகப்பேறு இல்லாத அவருக்கு இறைவழிபாட்டினாலும், அறத்தாலும் பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணை, நன்கு வளர்த்து தன் மருமகனுக்கு மணம் புரிந்து வைக்க எண்ணிய நிலையில், பெண்ணின் பெற்றோர் இருவரும் இறந்து விட்டனர். இதன்பின் ஊர்மக்கள், முறை மாமனை வரவழைத்துத் திருமணம் செய்து கொள்ள கேட்டுக்கொண்டனர். ஏற்கனவே தனக்குத் திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதால், தன் பெற்றோரின் சம்மதம் பெற்று மணம் புரிந்துகொள்வதாகக் கூறி முறைப் பெண்ணை அழைத்துக் கொண்டு, மதுரைக்குப் பயணமானார். வழியில் திருப்புறம்பயம் தலத்தில் தங்கினர். ஒரு இரவில் அந்த வணிகர் நாகம் தீண்டியதால் இறந்துவிட்டார். மாமன் மகள் செய்வதறியாது தவித்து அழுது அரற்றினாள்.அப்போது, கோயிலில் தங்கியிருந்த திருஞானசம்பந்தர் செவியில் இவளின் அபயக்குரல் கேட்டது. செய்தியறிந்து இரக்கம் கொண்ட திருஞானசம்பந்தர், வணிகரை  உயிர்ப்பித்து, அந்த பெண்ணை மணம்புரிந்துகொள்ளக் கூறினார். அதற்கு அந்த வணிகர், ‘‘ஐயனே உற்றார் உறவினர் சாட்சியின்றி எவ்விதம் இவளை மணம் புரிவது’’? என்று வினவினான். அப்போது, அந்த தலத்தில் இருந்த சிவலிங்கம், வன்னிமரம், கிணறு இவற்றை சாட்சியாக வைத்துத் திருமணத்தை நடத்தி வைத்தார்.மதுரையில் இருமனைவியரோடும் வாழ்ந்து வரும் வேளையில், மூத்தவளுக்கும் இளையவளுக்கும் கடும்சண்டை ஏற்பட்டது. அப்போது, அவளை முறை தவறி வாழும் காமக்கிழத்தி என பலவாறு அவதூறு கூறினாள். அதற்கு இளையவள், நான் முறைப்படி மணம்புரிந்தவள், அதற்குத் திருப்புறம்பயம் சிவலிங்கமும், வன்னி மரமும், கிணறுமே சாட்சி என்றாள். அதைக் கேட்டு எள்ளி நகையாடிய மூத்தவள், ‘‘இவை இங்கு வந்து சாட்சி கூறுமா?’’ என்றாள். மனம் உடைந்த இளையவள், மதுரை சோமசுந்தரப் பெருமானைத் தியானித்து தன் குறையைக் கூறி அழுதாள். அன்றிரவு அவள் கனவில் தோன்றிய இறைவன், ‘‘நாளை என் ஆலயத்தின் ஈசான்ய முனையில் உனக்குச் சாட்சியாக  மூவரும் தோன்றுவோம்’’ என்று கூறி மறைந்தார்.மறுநாள், அதே ஆலயத்தில் அனைவரும் திரண்டுநிற்க, சிவலிங்கம், வன்னிமரம், கிணறு மூன்றும் தோன்றியிருந்தன. இதைக் கண்ட அனைவரும் அதிசயித்தனர். மூத்தவள், இளையவளின் பக்தியை மெச்சி, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். இதன்பின் இருவரும் மனமொத்து வாழ்ந்தார்கள் என திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இன்றும் இதனை உறுதி கூறும் விதமாக, மதுரை ஆலயத்தின் இரண்டாம் பிராகாரத்தில், கல்லால் ஆன வன்னிமரம், சிறு கிணறு, சிவலிங்கம் அமைந்துள்ளன.தொகுப்பு: பனையபுரம் அதியமான்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi