புதுடெல்லி: வரும் சட்டப்பேரவை தேர்தலை தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடத்தலாமா என்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று திடீர் ஆலோசனை மேற்கொண்டது. இதுகுறித்து மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கவும் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் 4 மாதங்களே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இந்த நிலையில் மாநிலத்தில் தேர்தல் நடத்த இருக்கும் நிலவரம் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழகம் வந்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் மாநில தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலர், டிஜிபி, மாவட்ட தேர்தல் அலுவலர்களான ஆட்சியர்கள், மாவட்ட எஸ்பிக்கள், வருமான வரித்துறை அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா, துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, துணைத் தேர்தல் ஆணையர் எச்.ஆர்.னிவாசா, பீகார் தலைமை தேர்தல் அதிகாரி, பங்கஜ் வத்ஸவா ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் தமிழக சட்டப்பேரவை 2021க்கான பொதுத் தேர்தலை மதிப்பிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மலாய் மல்லியும் தமிழகம் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இரண்டு நாட்கள் தமிழகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு, பின்னர் புதுவையிலும் ஆலோசனை நடத்தி முடித்து டெல்லி திரும்பினார்கள். முக்கியமாக தமிழகம் மட்டுமில்லாமல் புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை காலம் என்பது வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. அதனால் தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு நடத்தியதுபோன்று மேற்கண்ட மற்ற நான்கு மாநிலங்களிலும் நடத்தி முடித்து அதற்கான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்தில் முன்னதாக தாக்கல் செய்துள்ளனர். தமிழகம், கேரளா, புதுவை, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்தும், அதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையை அடிப்படையாகக் கொண்டும் தேர்தல் தேதிகளை இறுதி செய்வது என்பது குறித்தான ஆலோசனை கூட்டம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அதிகாரிகள் சுசில் சந்த்ரா மற்றும் ராஜீவ் குமார் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், கொரோனா மற்றும் உருமாறிய கொரோனா பிரச்சனையின் தாக்கம் தற்போது உள்ளதால் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலை எப்படி கையாள்வது, அதற்கான இறுதி தேதியை எப்போது வெளியிடலாம், தமிழகத்தில் மொத்தம் 234 சட்டப்பேரவை தொகுதிகள் இருப்பதால் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதை அங்கு தவிர்த்து விட்டு இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கலாமா என ஆலோசிக்கப்பட்டது, மேலும் வாக்குச்சாவடிகளும் முன்பு இருந்ததைவிட தற்போது தமிழகத்தில் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் இதுகுறித்து மாநில தேர்தல் அதிகாரி மற்றும் அங்கிருக்கும் அரசியல் கட்சிகளிடம் மீண்டும் ஒருமுறை கருத்து கேட்டு பேசி முடிவெடுக்கலாமா என்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று அந்தந்த மாநிலங்களின் பண்டிகை தேதி மற்றும் பள்ளிகள் இயங்கும் நாட்களுக்கு ஏற்றவாறு தேர்தல் தேதிகளை வரையறுக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறனர். கடந்த முறை தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக தான் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது….