புதுச்சேரி, மே 24: புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ரவிச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடு முழுவதும் சமீபகாலமாக கொரோனா தொற்று பாசிட்டிவ் வருவதால், புதுவை மக்களுக்கும் ஒரு பயம் இருக்கிறது. அதுபோல், தமிழ்நாட்டிலும் 2 வாரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவையிலும் தினமும் ஒன்று, 2 கொரோனா பாசிட்டிவ் வருகிறது. கடந்த வாரம் மொத்தம் 12 பேர் பாதிக்கப்பட்டனர். 2 பேர் படுக்கையில் இருந்தனர். இப்போது எல்லோரும் குணமாகி வீட்டிற்கு திரும்பி விட்டனர். தற்போது பரவும் கொரோனா தொற்றானது அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவது இல்லை. 2 நாள் ஜூரம், இருமல், சளி மட்டும் தான் இருக்கிறது. ரொம்ப நுரையீரல் பாதிப்போ, நோயாளி மோசமான நிலைக்கு செல்லும் நிலை இதுவரை வரவில்லை.
கடந்த 19ம் தேதி முதல் இன்றுவரை புதுவையில் புதிதாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. ஆகையால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. சுகாதாரத்துறை சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை மற்றும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 தனிமை படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், காசநோய் மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கூடிய தனி கொரோனா வார்டு உள்ளது. அதில் 2 படுக்கைகள் வெண்டிலேட்டர் வசதியுள்ளது. புதுச்சேரியில் அதிக கொரோனா கேஸ் வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ளோம்.
அதனால் பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை. ஆனால் சில முன்னெச்சரிக்கைகள் எடுப்பது நல்லது. அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். இருமல், சளி உள்ளவர்களிடம் கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நமக்கு இருமல், சளி இருந்தால் கைக்குட்டை, துணியை வைத்து தும்மினாலோ, இருமினாலோ வைரஸ் பரவாமல் தடுக்கலாம். மத்திய அரசிடம் இருந்து முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என இதுவரை அறிவுறுத்தல் வரவில்லை. புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைவாக இருப்பதால் தற்சமயம் மாஸ்க் போட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மக்களுக்கு பயம் இருந்தால் மாஸ்க் போட்டுக் கொள்ளலாம். அரசு பொது மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. எந்த வகையான தொற்று என்பதை கண்டறிய புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். அதுவும், மத்திய அரசிடம் இருந்து அவசியம் அனுப்பக்கூறி அறிவிப்போ, அறிவுறுத்தலோ இதுவரையிலும் வரவில்லை. 2, 3 நாட்கள் இருமல், சளி இருந்தால் டெங்கு, மலேரியாவுக்கு எப்படி டெஸ்ட் எடுக்கிறோமோ, அதுபோல் கொரோனா டெஸ்டும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.