சேலம், அக்.15: சேலம் தென் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிஷோந்த்(27), மெக்கானிக். இவரது மனைவி கமலேஸ்வரி (19). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த மோகன்(23) என்பவர் வந்து கதவை தட்டினார். கதவை திறந்ததும் அவர் தகராறில் ஈடுபட்டார். அப்போது கிஷோந்தை மோகன் தாக்கியதுடன் அங்கிருந்து செல்ல மறுத்து விட்டார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சத்தம்போடவே மோகன் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனிடையே, கிஷோந்த் அருகில் உள்ள உறவினர்களை அழைக்க சென்றார். மீண்டும் வீட்டுக்கு வந்த போது, அங்கு கமலேஸ்வரி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. இதையடுத்து அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கிஷோந்த் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மனைவிக்கு, மோகன் டார்ச்சர் கொடுத்ததுடன் தன்னை தாக்கியதாக கூறினார். அதன்பேரில் மோகனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து உதவி கமிஷனர் லட்சுமி பிரியா, விசாரணை நடத்தி வருகிறார்.