நல்லம்பள்ளி, மே 26: நல்லம்பள்ளியில், தறிகெட்டு ஓடிய கார், காய்கறி கடைக்குள் புகுந்த விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். 4 டூவீலர்கள் சேதமடைந்தன.
தர்மபுரியில் இருந்து பாளையம்புதூர் நோக்கி, நேற்று சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. தர்மபுரி வெண்ணாம்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார்(42) என்பவர் ஓட்டி வந்தார். நல்லம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வந்த போது, திடீரென சாலையின் குறுக்கே ஒரு பைக் பாய்ந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக, காரை சற்று திருப்பியதால், தறிகெட்டு ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் இருந்த 4 டூவீலர்கள் மீது மோதி விட்டு, அங்குள்ள காய்கறி கடைக்குள் கார் புகுந்தது. இந்த விபத்தில் காய்கறி கடை வைத்திருந்த சேசம்பட்டியைச் சேர்ந்த சுமித்ரா(38), சாலையோரம் டூவீலரில் நின்றிருந்த நல்லம்பள்ளி வன்னியர் தெருவைச் சேர்ந்த மாதம்மாள்(49), தங்கராஜ்(50), அருள்(32), ஜோதி(31), ஷாலினி(5) ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், காயமடைந்த 4 பெண்கள் உட்பட 6 பேரையும் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்குள்ளான கார் மற்றும் 4 டூவீலர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து
வருகின்றனர்.