தர்மபுரி, ஜூலை 7: ஓசூரில் பாலம் விரிசல் காரணமாக, சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, தர்மபுரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மாற்றம் செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மையப் பகுதியில் உள்ள இணைப்பில் கடந்த மாதம் 21ம்தேதி திடீரென விரிசல் ஏற்பட்டது. இணைப்பு பகுதியில் இருந்து பாலம் முக்கால் அடி தூரம் விலகியது. இதனால், பாலத்தில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாள்தோறும் சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த பாலம் வழியாக நாளொன்றுக்கு 80 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், ஓசூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஓசூர் மற்றும் சிப்காட் பகுதியில் பெங்களூரு, மைசூர் செல்லும் வாகனங்களை தர்மபுரி மாவட்டத்தில் மாற்றம் செய்து பிரித்து விடும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் தர்மபுரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி வழியாக (என்எச்-44) செல்லும் கார்கள் மற்றும் சரக்கு வாகனங்களை, தர்மபுரி முதல் ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் நல்லூருக்கு அமைக்கப்பட்டு வரும் புதிய தேசிய நெடுஞ்சாலை 244 வழியாக அதியமான்கோட்டை அருகே பட்டர்பிளை பாலம் அருகிலிருந்து பிரித்து அனுப்பப்படுகிறது.
இதன் மூலம் ஓசூர் மற்றும் பெங்களூரு, மைசூர் செல்வோர் ஓசூர் நகர பகுதி வழியாக செல்லாமல் வெளிவட்ட சாலைக்கு எளிதில் கடந்து செல்ல முடியும். இதனால், ஓசூரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைய வாய்ப்புள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.