கும்மிடிப்பூண்டி, ஜூன் 3: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு, சந்துதெரு, நாட்டாமைக்காரர் தெரு, மணியக்கார் தெரு, தபால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மேட்டு தெரு திரவுபதி அம்மன் கோயில் அருகே மிகப் பழமையான தரைபாலம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் வெள்ளநீர் சூழ்ந்து தரைப் பாலம் வழியாக பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, பழைய தரைப்பாலத்தை அகற்றி புதிதாக கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பேரூராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், ரூ.1.32 கோடி மதிப்பில் புதிய தரைப்பால கட்டுமானப் பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. தற்போது தரைப்பாலம் பணிகள் 50 சதவீதம் முடிவுற்ற நிலையில், அப்பகுதி மக்கள் 20க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஈசா ஏரிலிருந்து உபரிநீர் மேட்டு தெரு கால்வாய் வழியாக செல்லும் வழியில், புதிதாக கட்டப்பட்டு வரும் தரைப்பாலம் குறுகலாக இருப்பதால் வாகனங்களில் செல்ல முடியவில்லை என்றும், தரைப்பாலத்தை அகலப்படுத்த வேண்டுமென்றும் கூறி கோஷம் எழுப்பினர். இதனை அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் தரைப்பாலம் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். தரைப்பாலம் பொது நிதியின் கீழ் அகலப்படுத்தி கட்டப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.