குளத்தூர், நவ. 9: தருவைகுளம் கடல் பகுதியில் சண்முகையா எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். குளத்தூர் அடுத்த தருவைகுளம் மீனவக் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக கடல் கரையில் இருந்து சுமார் 5 கிமீ வரை கடல் தண்ணீரானது பச்சை நிறமாக மாறி காட்சியளிக்கிறது. மேலும் கடலில் இருந்து முறல், சிங்கி இறால், ஊழி, கணவாய் என பல்வேறு வகையான மீன்கள் செத்து கரை ஒதுங்கின. கடல் நீர் மாற்றம், மீன்கள் செத்து ஒதுங்குவதால் அச்சத்திற்கு உள்ளான மீனவர்கள், நேரடி ஆய்வு நடத்துமாறு சண்முகையா எம்எல்ஏவிடம் கோரிக்கைவிடுத்தனர். அதன்பேரில் தருவைகுளம் கடல் பகுதிக்கு நேற்று வருகைதந்து ஆய்வு மேற்கொண்ட சண்முகையா எம்எல்ஏ, சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை மற்றும் மாசுகட்டுப்பாடு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். மேலும் கடல் தண்ணீரை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்து உரிய பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தினார். ஆய்வின்போது ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், பஞ். தலைவர் இளையராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.