கும்பகோணம், பிப்.26: தர்மபுரி வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டி ஊராட்சி சின்னமுருக்கம்பட்டி தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், அங்கு பணிபுரிந்த செண்பகம், திருமலர், மஞ்சு ஆகிய 3 பெண்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.4 லட்ச ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளது. அதோடு, உயிரிழந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.பட்டாசு ஆலை விபத்துகள் அவ்வப்போது நடந்து வருவது கவலையளிக்கிறது. இதுபோன்று, இனி நிகழாதவாறு போதிய முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு விரைந்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.