தர்மபுரி, செப்.15: தர்மபுரி மாவட்டத்தில் பருத்தி சாகுபடியின் போது, விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி நல்ல மகசூலை பெற வேண்டும் என விதை பரிசோதனை அலுவலர் அருணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில், தற்போது பருத்தி சாகுபடிக்கு விதைப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தரமான விதைகளை தேர்வு செய்து, சாகுபடி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, தர்மபுரி, அரூர், பாலக்கோடு, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம் மற்றும் மொரப்பூர் பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி மேற்கொள்ள, பருத்தி மற்றும் வீரிய பருத்தி விதைகளை வாங்கும் போது, உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் இருந்து மட்டும், விதைகளை வாங்க வேண்டும்.
விதை விபர அட்டையில் குறிப்பிட்டுள்ள விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும். விதைகளை வாங்கும் முன்னர், விதைக்குவியலுக்குரிய முளைப்புத் திறன் பகுப்பாய்வு அறிக்கையினை கேட்டு சரிப்பார்க்க வேண்டும். அவ்வாறு வாங்கப்படும் விதைகளுக்கு, கட்டாயம் உரிய விற்பனை ரசீதை கேட்டுப் பெற வேண்டும். தர்மபுரியில் கலெக்டர் அலுவலக வளாக பின்புறம் செயல்பட்டு வரும் விதைப்பரிசோதனை நிலையத்தில், ஒரு விதை மாதிரிக்கு பரிசோதனை கட்டணமாக ₹80 செலுத்தி, விதைகளின் தரத்தினை அறிந்து, சாகுபடி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.